கலீபா உமர் (றழி) அவர்களின் உத்தம பண்புகள்
உமர் கத்தாப் (றழி) அவர்களின் பத்தாவது வருட ஆட்சி காலத்தில் பத்து யுகங்களில் கூட சாதிக்க முடியாத சிறப்பம்சங்களை சாதித்து இஸ்லாமிய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
உத்தம ஸஹாபியான உமர் (ரழி) அவர்களிடம் நுண்ணறிவு, ஆற்றல், வீரம், தீரம், மேன்மை, குடிமேல் அன்பு, உறவு, ஆராய்ச்சித் திறன், விவேகம், தியாகம் முதலிய தகைமைகள் நிறைந்திருந்தன. இதனாலேயே அபூபக்கர் சித்திக் (றழி) அவர்கள் தான் உயிருடன் இருக்கும் போதே உமர் (றழி) அவர்களை அடுத்த கலீபாவாக நியமித்து வைத்தார்கள்.
மேலும் இவரது குறிப்பிடத்தக்க உத்தம சிறப்புப் பண்பாக விளங்கிய இவர்களது நீதி எனும் சட்டத்துறையாகும்.
‘ஆச்டிடுழூடூ ஏச்ணூவ’ தன்னுடைய புகழ் பெற்ற ‘கூடழூ 100′ எனும் நூலில் உலகில் பிரசித்தி பெற்ற உத்தம புருஷர்கள் நூறு பேரை தெரிவு செய்து அதில் உமர் (ரழி) அவர்களுக்கு 51ஆவது இடத்தை வழங்குவதுடன் ‘மேற்குலக ஜூலியர் சீசர், சார்லமான் ஐ விட உமர் உறுதியான முக்கியத்துவம் வாய்ந்தவர்’ என்கின்றார்.
நுபுலத்தின் பின் இஸ்லாம் வேகமாக பரவுவதை கண்ட குறைஷிக் காபிர்களின் தலைவன் அபூஜஹ்ல் தனது சபையைக் கூட்டி இஸ்லாம் வேகமாக பரவுவதாகவும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிரசார வேலையை நிறுத்துவதற்கான நபி (ஸல்) அவர்களின் தலைமையை வெட்டி கொண்டு வருவோருக்கு நூறு ஒட்டகங்களை பரிசளிப்பதாகவும் பிரஸ்தாபித்தார். இதனைக் கேட்ட உமர் (றழி) உருவிய வாளுடன் வெளியே கிளம்பினார். வேகமாக பறந்தார். இடையில் நயீம் பின் அப்துல்லாஹ் என்பவர் உமர் (ரழி) யை சந்தித்து ”உங்களது தங்கையும் கணவரும் இஸ்லாம் மார்க்கத்தை தழுவி விட்டார்களே, முதலில் அவர்களை கவனியும்” என்றார். உடனே சினம் கொண்ட சிங்கமாய் விரைந்து தங்கையின் வீட்டை அண்மித்த போது தங்கையும் கணவரும் திருக்குர் ஆனை ஓதிக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டு கதவை தட்டினார். கதவை திறந்த தங்கையிடம் வினவி ஓங்கியடித்தார். தங்கையோ இரத்தம் வடிந்த வண்ணம் ”ஆம் நாம் புனித இஸ்லாத்தை தழுவி விட்டோம், உம்மால் எம்மை எதுவும் செய்ய முடியாது என்று உறுதியாகக் கூறியவுடன் உமர் (ரழி) இன் சிந்தனை ஒரு கணம் மாறியது. ஆறுதல் அடைந்த அவர் ஓதிக் கொண்டிருந்த குர்ஆனை கேட்க, தங்கையோ ”முடியாது உளமும் உடலும் சுத்தமற்ற நிலையில் அதை யாராலும் தொட முடியாது” என்றவுடன் தன்னை சுத்தமாக்கிக் கொண்டு அவ்விடத்திலேயே தன் ஈமானையும் சுத்தப்படுத்திக் கொண்டு நபிகள் (ஸல்) அவர்களை தேடிச் சென்று அவர்களை கட்டித் தழுவி புனிதமான இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்கள். உடனே நபியவர்கள் ”யா அல்லாஹ்! இரு உமர்களில் (உமர், அபூ ஜஹ்ல்) மிக விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாத்தை மேலோங்கச் செய்வாயாக” என பிரார்த்தித்தார்கள். ஆம், உமர் (ரழி) இஸ்லாத்தை ஏற்றதன் பின் இஸ்லாமிய மார்க்கம் அதி வேகமாகப் பரவியது. பகிரங்கமாக தொழுகைகள் தொழப்பட்டன. இஸ்லாத்தின் வளர்ச்சி மிக வேகம் கொண்டது.
இவர்கள் இஸ்லாமிய கொள்கைகளை செயல்முறைப்படுத்துவதற்காக அரும்பாடுபட்டார்கள். எதிரிகள் மேல் கொண்ட எல்லா யுத்தங்களிலும் வெற்றிக் கொடியேற்றினார்கள்.
ஹிஜ்ரத்திலிருந்து ஆண்டை கணித்தவர் இவரே.
அரேபிய தீபகற்பத்தை ஒரு கலப்பற்ற முஸ்லிம் நாடாக்கினார்.
இவர்களுடைய ஆட்சியின்போது கியாபத் ஆட்சி அதி வேகமாகப் பரவி அன்றைய வல்லரசுகளான ரோம், பாரசீகம் என்பன வென்றெடுக்கப்பட்டதுடன் எகிப்து, சிரியா, ஈரான், ஈராக், இஸ்பஹான் எனும் நாடுகள் வென்றெடுக்கப்பட்டதுடன் கூபா, பஸரா, ஜஸீரா, மவ் மௌனிஸ் முதலிய புது நகரங்கள் நிறுவப்பட்டன. மதீனா பள்ளிவாசல் விசாலமாக்கப்பட்டது.
இவர்கள் இரவில் நித்திரை விழித்து நாடு சுற்றி மக்களின் குறை நிறைகளை கண்டறிந்து ஏற்ற பரிகாரம் செய்தார்கள். தமது கைகளாலேயே உணவுப் பொதிகளை சுமந்து சென்று பசி பட்டினி தீர்த்த இவர்களுக்கு ‘மூட்டை சுமந்த முடி மன்னன்’ என்றொரு சிறப்புப் பெயரும் உண்டு. மதீனாவுக்கும் மக்காவுக்குமிடையில் ஒரு உணவகத்தை நிறுவி வழிப்போக்கரின் பிரயாணிகளின் பசி தீர்த்தார்கள்.
உலகையே நடுநடுங்கச் செய்த வீரரான உமர் கத்தாப் (ரழி) அவர்களிடம் படாடோபம், ஆடம்பரம், உல்லாசம் இருக்கவில்லை. மிகவும் எளிய வாழ்க்கை வாழ்ந்தார்கள். ஓலைக் குடிசையில் மண்தரையில் மெய் பாதுகாவலர் எவரும் இன்றி வாழ்ந்து வந்தார்கள். அண்டை போட்ட அங்கிகளையே உடுத்து வந்தார்கள். அரசாங்க பொது நிதியை மிகுந்த இறையச்சத்துடன் பிரயோகித்தார்கள்.
அன்னாரின் செங்கோலாட்சி அன்றும் இன்றும் என்றும் எல்லோராலும் புகழ்ந்து ஏற்றுக் கொள்ளக்கூடியது. எளியோர் வறியோர், உறவினர் மற்றோர், அரசன் ஆண்டி, அதிகாரி பிரஜை, நண்பன் விரோதி, அறிமுகமானவன் தெரியாதவன் என்ற எவ்வித பாகுபாடுமின்றி எல்லோருக்கும் ஒரே நிதி வழங்கினார்கள். இவரின் தீர்ப்பினாலேயே நைல் நதிக்காக பலி கொடுக்கும் பழக்கம் நிறுத்தப்பட்டது
.
அன்னாரின் ஆட்சி முறை தான் இன்றைய ஜனநாயக பாரம்பரியத்துக்கு வித்திட்டதெனலாம்.
உமர் (ரழி) அவர்கள் தனி மனித சுதந்திரம் பேச்சு சுதந்திரம், அரசனின் பிழைகளையும் தட்டிக் கேட்கும் சுதந்திரம் வழங்கியிருந்தார்கள். ஒரு முறை கலீபா (றழி) குத்பா பிரசங்கத்துக்காக மிம்மரில் ஏறிக் கொண்டிருக்கையில், ஒருவர் அமீருல் முஃமினீனே! கடந்த வாரம் பைத்துல் மால் (பொதுத் திறைசேரி) மூலமாக பகிர்ந்தளிக்கப்பட்ட புடவை ஒருவருக்கு ஒரு அங்கி மட்டுமே தைப்பதற்கு போதுமானது. ஆனால் இப்போது நீங்கள் அணிந்துள்ள ஜிப்பாவும் அதே புடவையாக இருக்கின்றது. பகிரப்பட்ட புடவை ஒரு பூரண ஜிப்பாவை தைக்க போதுமானதல்ல. இது மட்டும் எப்படி முடிந்தது என்றார். அதற்கு கலீபா அவர்கள் ”உனது கேள்வி நியாயமானதே. இதற்குரிய மறுமொழியை அதோ எனது மகன் வழங்குவார்” என்றார்கள். ‘பைதுல்மால் புடவையில் அதே பங்குதான் எனது தந்தைக்கும் கிடைத்தது. அது பூரண ஜிப்பாவுக்கு போதாமையால் எனக்கு கிடைத்த பங்கையும் நான் எனது தந்தைக்கே கொடுத்தேன்” என்றார் மகன். எப்படி அன்றைய தனிமனித சுதந்திரம்?
பைதுல் மால் எனும் திறைசேரி முறை இவர்களாலேயே
ஏற்படுத்தப்பட்டது.
தமது இராஜியத்தின் நிலப்பரப்பை பல மானிலங்களாக பிரித்து அவற்றிற்கு ஒவ்வொரு கவர்ணரை நியமித்ததுடன் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு காதி நீதிபதியையும் நியமித்து அவர்களை தானே நிர்வகித்து வந்தார்கள்.
மாகாணப் பிரிவு, பொலிஸ் பிரிவு, இராணுவப் பிரிவு போன்ற பிரிவுகளை ஸ்தாபன ரீதியாக்கி அவற்றுக்கு தகைமையான உத்தியோகத்தர்களை நியமித்து அவர்களுக்கு வேதனத்தைக் கூட்டிக் கொடுத்தார்கள். இதனால் இவரது ஆட்சி காலத்தில் இலஞ்ச ஊழல் தலைகாட்டவில்லை. இவருக்கென ஒரு ஆலோசனை சபையும் இருந்தது.
அல்குர்ஆனை புத்தக உருவில் அமைத்தவர்கள் இவர்களே. இவர்கள் இம்முயற்சியை அவர்கள் எடுத்திராவிட்டால் நாம் சம்பூர்ணமான அல்குர்ஆனை பெற்றிருப்போமா?
இஸ்லாமிய வரலாற்றையே அலங்கரித்த இம் மனிதப் புனிதர் மனிதருள் மாணிக்கமாகவும் ஆட்சியாளருக்கெல்லாம் முன்னோடியாகவும் நீதி தவறாத நேர்மையாளராகவும் உயர்ந்த பண்பாளராகவும் வாழ்ந்தார்கள்.
”கலீபா உமறு கத்தாப்
காட்டி தந்த நீதியினை
காட்டித் தந்த நீதியினை
மறவோம் நீயே சாட்சி அல்லாஹ்
மறந்திடவே மாட்டோம் இனி
மறந்திடவே மாட்டோம் இனி’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக