புனித பூமி பலஸ்தீனும் முதல் கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவும்
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M.
இஸ்மாயில் ஸலஃபி
- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
பலஸ்தீன் பூமியை இஸ்லாம் புனித பூமி என்று கூறுகின்றது. அங்குள்ள மஸ்ஜிதுல் அக்ஸா என்பது முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகும். இது குறித்த சில குறிப்புக்களை இந்த ஆக்கத்தில் முன்வைக்க விரும்புகின்றோம்.
01. அருள் வளம் பொருந்திய பூமி:
பலஸ்தீன் பூமி இஸ்ரவேல் சமூம் உருவாக முன்னரே பரகத் பொருந்திய பூமி என அழைக்கப்பட்டது.
“அகிலத்தாருக்கு எப்பூமியில் நாம் பாக்கியம் அளித்தோமோ, அதன்பால் அவரையும் லூத்தையும் (அனுப்பிக்) காப்பாற்றினோம்.” (21:71)
இந்த வசனத்தில் அகிலத்தாருக்காக அருள் பொழியப்பட்ட பூமி என பலஸ்தீன பூமி அழைக்கப்படுகின்றது.
“எனது சமூகத்தினரே! அல்லாஹ் உங்களுக்கு விதித்த பரிசுத்தமான இப்பூமியில் நுழையுங்கள். நீங்கள் புறமுதுகிட்டு ஓடாதீர்கள். அவ்வாறெனில், நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள் (என்றும் மூஸா கூறினார்.)” (5:21)இந்த வசனமும் பலஸ்தீன பூமி புனித பூமியென்று கூறுகின்றது.
02. மிஃராஜின் பூமி:
நபி(ச) அவர்களது வாழ்வில் நடந்த மிகப்பெரும் அற்புத நிகழ்வே இஸ்ராவும் மிஃராஜுமாகும். நபி(ச) அவர்கள் ஓர் இரவில் மக்காவில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீனிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அற்புதமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். இது “இஸ்ராஃ” என்று கூறப்படும். பின்னர் அங்கிருந்து ஏழு வானங்களையும் தாண்டி விண்ணுலகப் பயணத்திற்காக அழைத்துச் செல்லப் பட்டார்கள். இது “மிஃராஜ்” என்று கூறப்படும். அவர்களது இஸ்ராஃ, மிஃராஜுக்குரிய புனித பூமியாக பலஸ்தீனும் மஸ்ஜிதுல் அக்ஸாவும் அமைந்துள்ளது.
“(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, நாம் சுற்றுப்புறச் சூழலைப் பாக்கியம் பொருந்தியதாக ஆக்கிய அந்த மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில் அழைத்துச் சென்றவன் தூய்மையானவன். நமது அத்தாட்சிகளிலிருந்து அவருக்கு நாம் காண்பிக்கவே (இவ்வாறே செய்தோம்) நிச்சயமாக அவன் செவியுறுபவன்ளூ பார்ப்பவன்.” (17:1)
இந்த வசனத்திலும் மஸ்ஜிதுல் அக்ஸாவைச் சூழவுள்ள பகுதி அருள்வளம் பொழியப்பட்ட பூமியென்று கூறப்பட்டுள்ளது. சூழவுள்ள பகுதி பரகத் செய்யப்பட்டது என்றால் மஸ்ஜிதுல் அக்ஸா அதைவிட அதிகம் அருள் வளம் பொழியப்;பட்டது என்பதை எவரும் எளிதில் உணரலாம்.
03. இரண்டாவது மஸ்ஜித்:
அபூதர்(வ) அவர்கள் கூறுகின்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முதலாவது அமைக்கப்; பட்ட மஸ்ஜித் எது? என்று கேட்டேன். (மக்காவில் அமைந்துள்ள) மஸ்ஜிதுல் ஹராம் என்று நபி(ச) அவர்கள் கூறினார்கள். அடுத்து எது? எனக் கேட்ட போது (ஜெரூஸலத்தில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா எனப் பதிலளித்தார்கள்.” (புஹாரி: 3425)
இந்த ஹதீஸின் அடிப்படையில் உலகில் அமைக்கப்பட்ட இரண்டாவது புனித மஸ்ஜிதாக பைதுல் முகத்தஸ் மஸ்ஜித் குறிப்பிடப் படுகின்றது.