கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய பெருமக்களே! இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான
நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு
பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். நோன்புப்
பெருநாள் தினத்தில் ஸதக்கத்துல் ஃபித்ர் எனும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது
போல்,
ஹஜ்ஜுப்
பெருநாள் தினத்திலும் உழ்ஹியா எனும் குர்பானி கொடுப்பது வசதியுள்ளவர்கள் (கடன்
வாங்கி குர்பானி கொடுக்க வேண்டியதில்லை) மீது கடமையாக்கப்பட்டுள்ளது. அவற்றின் சட்ட
திட்டங்களை அல்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் மூலம் தெரிந்து
கொள்வோம்.
குர்பானியின் வரலாறு
இப்ராஹிம் (அலை) அவர்களின் முதுமையின் போது இஸ்மாயீல் (அலை) எனும்
குழந்தையை அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்ததால் தன் மகன் மீது மிகுந்த பாசம்
வைத்திருந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களைத் தனக்காக அறுத்துப் பலியிட
வேண்டும் என்று இப்ராஹிம் (அலை) அவர்களை (சோதிப்பதற்காக) அவர்களுக்கு அல்லாஹ்
கனவில் மூலம் கட்டளையிட்டான். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற
உறுதியில் மகனை அறுக்க முற்ப்டடார்கள். அப்போது ஷைத்தான் அவர்களுடைய மனதில் தீய
ஊசலாட்டங்களை ஏற்படுத்தினான். ஆனால் இப்ராஹிம் (அலை) அவர்கள், ஷைத்தானுக்கு கட்டுப்படாமல்
அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றத் துணிந்தார்கள். அவர்களின் இந்தத் தியாகத்தை
அல்லாஹ் ஏற்றுக் கொண்டு இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பலியிடுவதற்குப் பதிலாக ஒரு
பலிப்பிராணியை பலியிடுமாறு கட்டளையிட்டான். மேலும் பின்வரும் மக்களிடையே இந்த
நடைமுறையை விட்டுவைத்தான். இந்த விவரங்களெல்லாம் அல்குர்ஆனின் 37வது
அத்தியாயமான அஸ்ஸாஃப்பாத்தில் 100
முதல் 111
வரையிலான வசனங்களில் கூறப்பட்டுள்ளது.