சேவைகள்
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 63% ஆக இருக்கின்றன. சேவை வரியை மேலும் மேலும்
சேவைகளுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் வரி வருமானம் 20% அதிகமாகும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தற்போது பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ள இன்னின்ன
சேவைகளுக்கு 10% வரி என்று இருக்கும் சட்டத்தை மாற்றி, புதிதாக வெளியிடப்படும்
‘எதிர்மறை’ பட்டியலில் இல்லாத அனைத்து சேவைகளுக்கும் 10% (அல்லது எதிர்காலத்தில்
நிர்ணயிக்கப்படும் வீதத்தில்) வரி என்பது விரைவில் அமலுக்கு வரப் போகிறது.
எதிர்மறை பட்டியல் அடிப்படையிலான சேவை வரிக்கான
அறிவிப்பு நவம்பர் 17 அன்று வெளியிடப்பட்டது. “சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கையில்
ஈடுபட்டிருக்கும் எவரும் வரிக்குட்பட்ட நபர் என்று வரையறுக்கப்படுகிறார். அவரது
நடவடிக்கை லாப நோக்கத்தில் செய்யப்பட்டாலும் சரி, இலாப நோக்கம் இன்றி
செய்யப்பட்டாலும் சரி, வரி வசூலித்துக் கட்ட வேண்டியது அவர் பொறுப்பு. கூடவே எந்த
ஒரு நடவடிக்கையையும் சேவை என்று அறிவிக்க அரசாங்கத்துக்கு உரிமை இருக்கிறது”
சேவை வரி, விற்பனை வரி போன்ற மறைமுக வரிகள்
நுகர்வோரிடமிருந்து நிறுவனங்களால் வசூலிக்கப்பட்டு அரசாங்கத்துக்கு செலுத்தப்பட்டு
விடுகின்றன. அந்த வகையில் இந்த சேவை வரிச்சுமையை அன்றும் இனியும் சுமப்போர்
மக்கள்தான்.
நிறுவனங்களில் லாபத்தின் மீது அல்லது தனி நபரின்
வருமானத்தின் மீது விதிக்கப்படும் வருமான வரி போன்ற நேர்முக வரிகளைப் பொறுத்த வரை
வரி செலுத்த வேண்டிய பொறுப்பு வரி கட்ட வேண்டியவரிடமே இருக்கிறது. நிறுவனங்களின்
லாபத்தின் மீதான கார்பொரேட் வருமான வரி முதலாளிகளின் வருமானத்தில் கை வைப்பது. அதை
எத்தனை வழிகளில் ஏய்க்க முடியுமோ அத்தனை வழிகளிலும் அவர்கள் கில்லாடிகளாக
இருப்பதால், அரசாங்கம் கெஞ்சிப் பார்த்தும் முடியாமல், வரி வீதத்தை வெகுவாகக்
குறைத்து, தயவு செய்து வரி செலுத்தும்படி முதலாளிகளை அடிபணிந்து கேட்டுக்
கொண்டிருக்கிறது. இதற்கு மேல் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வரிச்சலுகை
அவர்களுக்கு தரப்படுகிறது.
உதாரணமாக ஒருவரது மாதாந்திர தொலைபேசி கட்டணம் 900
ரூபாய் என்றால் அதில் செலவுகள் போக நிறுவனத்துக்குக் கிடைக்கும் லாபம் 10% ஆக
இருக்கலாம் (90 ரூபாய்). அதாவது, நிறுவனத்தின் எல்லா செலவுகளும் போக அனில்
அம்பானிக்கு வழங்கப்படும் பல லட்ச ரூபாய் இயக்குனர் சம்பளம், முதலீடாக வாங்கி வைத்த
கருவிகளின்/இயந்திரங்களின் தேய்மானம், வங்கியில் வாங்கிய கடனுக்கு கட்டும் வட்டி
உள்ளிட்ட எல்லா செலவுகளும் கழித்த பிறகு 90 ரூபாய் லாபம். அந்தவகையில் இலாபத்திற்கு
முன்பாகவே மறைமுக இலாபம் முதலாளிகளுக்கு போய்ச்சேருகிறது.
அந்த 90 ரூபாயில் 33% கார்பொரேட் வருமான வரி
விதித்தால் அரசுக்குக் கிடைப்பது சுமார் 30 ரூபாய். இதன் மூலம் அரசாங்க வரி
வருமானத்தை உயர்த்த வேண்டுமானால் வரி வீதத்தை 50% (45 ரூபாய்) அல்லது 80% (72
ரூபாய்) ஆக்க வேண்டியிருக்கும். நம் அதியமான் சொல்வது போல அது முதலாளிகள் மீது
தாங்க முடியாத பாரத்தைச் சுமத்தி அவர்களை வரி ஏய்க்கத் தூண்டி விடும். அத்தகைய
கஷ்டத்தை முதலாளிகளுக்குக் கொடுக்க விரும்பாமல் அரசு உச்சபட்ச கார்பொரேட் வருமான
வரியை சுமார் 33%ஆக வைத்திருக்கிறது. இதுதான் 80களுக்கு முன்பு 90% ஆக இருந்த
அதிகபட்ச வருமான வரி வீதம் இப்போது 33% ஆக குறைந்த கதை.
அதிகரித்துக் கொண்டே வரும் அரசு செலவுகளுக்கு
வேறு என்னதான் வழி? இங்குதான் வருகின்றன சேவை வரி போன்ற வரிகள். அவை நுகர்வோரின்
மடியிலிருந்து நேரடியாக பணத்தைப் பிடுங்கி அரசுக்குக் கொண்டு சேர்ந்து
விடும்.
மேலே சொன்ன தொலைபேசி பில்லில் கட்டணத்துக்குக்
கீழே சேவை வரி என்று தனியாக கணக்கிட்டு இதை வசூலித்திருப்பார்கள். 900 ரூபாய்
மாதாந்திர கட்டணத்தில் சேவை வரியாக 10%யும் கூடுதல் கட்டணம் 0.3% சேர்த்து 993
ரூபாய் ஆக பில் வந்திருக்கும். நிறுவனத்தின் லாபத்திற்கு பங்கம் இல்லாமல் நேரடியாக
பயனாளரிடமிருந்து வசூலிக்கப்பட்டு அரசாங்கத்துக்குப் போய்ச் சேர்ந்து விடுகிறது.
‘வரி ஏய்க்கப்பட்டு விடுமே’ என்று பயப்படத் தேவையில்லை!
சுமக்கப் போவது நேர்மையான பொதுமக்கள்!
வசூலிக்கப் போவது லாபத்தில் பாதிப்பு ஏற்படாத
நேர்மையாக இருக்க முடியாத கார்பொரேட்!
வருமானம் வருவது அரசாங்கத்துக்கு!
கார்பொரேட் லாபத்துக்கு 90% வரி விதித்து
முதலாளிகளை கொடுமைப்படுத்துவதை விட, மொத்தக் கட்டணத்தில் 10% சேவை வரி விதித்து
பொதுமக்களிடமிருந்து நோகாமல் நொங்கு நோண்டி கொள்கிறார்கள் இந்த ‘மக்கள் நல’
அரசுகள்.
“சேவைகளை வரி விதிப்பிலிருந்து விட்டு வைப்பதற்கு
உறுதியான காரணம் எதுவும் இல்லை. பொருட்களின் விற்பனைக்கு வரி விதிக்கப்படும் போது,
பல நாடுகளில் பொருட்கள் விற்பனையும் சேவை விற்பனையும் வரி விதிப்பைப் பொறுத்த வரை
ஒரே மாதிரி கருதப்படும் போது நமது நாட்டிலும் சேவைகளின் மீது வரி விதிக்க என்ற திசை
நோக்கிய பயணத்தின் எளிய துவக்கமாக, தொலைபேசி, ஆயுள் காப்பீடு தவிர்த்த காப்பீடு,
மற்றும் பங்கு தரகர்களின் சேவைகளின் மீது இந்த நிதியாண்டு முதல் 5% வரி
விதிக்கப்படுகிறது”
1994-95க்கான நிதிநிலை அறிக்கையை
அறிமுகப்படுத்தி, அப்போதைய நிதி அமைச்சர், கடந்த 20 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார
பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைத்து இந்தியாவை வல்லரசாக்கிய மாமேதை மன்மோகன் சிங்,
இப்படி சேவை வரியை இந்திய மக்களுக்கு அறிமுகம் செய்தார். 3 சேவைகளின் மீது 5% வரி
என்று ஆரம்பித்த சேவை வரி இப்போது 119 சேவைகளின் மீது 10% ஆக
உயர்ந்திருக்கிறது.
நிதியாண்டு
|
வருமானம்(கோடி ரூபாய்)
|
முந்தையஆண்டை
விட அதிகரிப்பு
|
சேவைகளின்எண்ணிக்கை
|
வரிகட்டுபவர்களின்
எண்ணிக்கை
|
முந்தையஆண்டை
விட அதிகரிப்பு.
|
1994-95
|
410
|
Base Year
|
3
|
3,943
|
Base Year
|
1995-96
|
846
|
106.00
|
6
|
4,866
|
23.41
|
1996-97
|
1,022
|
21.00
|
6
|
13,982
|
187.34
|
1997-98
|
1,515
|
48.00
|
18
|
45,991
|
228.93
|
1998-99
|
1,787
|
18.00
|
26
|
107,479
|
133.70
|
1999-00
|
2,072
|
16.00
|
26
|
115,495
|
7.45
|
2000-01
|
2,612
|
23.00
|
26
|
122,326
|
5.91
|
2001-02
|
3,305
|
26.00
|
41
|
187,577
|
53.34
|
2002-03
|
4,125
|
25.00
|
52
|
232,048
|
23.71
|
2003-04
|
7,890
|
91.00
|
62
|
403,856
|
74.04
|
2004-05
|
14,196
|
80.00
|
75
|
774,988
|
91.89
|
2005-06
|
23,053
|
62.00
|
84
|
846,155
|
9.18
|
2006-07
|
37,482
|
63.00
|
99
|
940,641
|
11.17
|
2007-08
|
51,133
|
36.00
|
100
|
1,073,075
|
14.08
|
2008-09
|
60,702
|
19.00
|
106
|
1,204,570
|
8.78
|
2009-10
|
58,319
|
-3.93
|
117
|
1,307,286
|
8.53
|
கதை இன்னும் முடியவில்லை, இனிமேல்தான் சுவராஸ்யம்
ஆரம்பிக்க இருக்கிறது.
எதிர்மறை பட்டியல் அடிப்படையிலான சேவை வரிக்கான
அறிவிப்பு நவம்பர் 17 அன்று வெளியிடப்பட்டது. “சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கையில்
ஈடுபட்டிருக்கும் எவரும் வரிக்குட்பட்ட நபர் என்று வரையறுக்கப்படுகிறார். அவரது
நடவடிக்கை லாப நோக்கத்தில் செய்யப்பட்டாலும் சரி, இலாப நோக்கம் இன்று
செய்யப்பட்டாலும் சரி, வரி வசூலித்துக் கட்ட வேண்டியது அவர் பொறுப்பு. கூடவே எந்த
ஒரு நடவடிக்கையையும் சேவை என்று அறிவிக்க அரசாங்கத்துக்கு உரிமை இருக்கிறது”
முதலாளிகளுக்கு வரி ஏய்ப்பு செய்யும் தொந்தரவு
ஏற்பட்டு விடக் கூடாதே என்ற நல்ல நோக்கத்தில் இந்த சுமையை ஏற்றுக் கொள்வதுதான்
தேசப் பற்றுள்ள குடிமகனுக்கு அழகு!
தற்போதைக்கு விலக்கு அளிக்கப்படப் போவதாக
சொல்லப்பட்டுள்ள சேவைகள், இந்த பட்டியலில் சில நீக்கப்படலாம். ஒவ்வொன்றையும் கவனமாக
படித்துப் பார்த்து விடுங்கள். இதில் இல்லாத எந்த ஒரு சேவைக்கும் பணம் வாங்கினால்
சேவை வரி கட்ட வேண்டிய பொறுப்பு உங்களுக்கு வந்து விடும்.
1. அரசு, நீதித் துறை, ரிசர்வ் வங்கி மற்றும்
அரசு ஆணையங்கள் அளிக்கும் சேவைகள்.
2. அரசு கழகங்களில் நியமிக்கப்படும் தனிநபர்களின்
சேவை
3. ஐநா, பன்னாட்டு அமைப்புகள், தூதரகங்கள்
அளிக்கும் சேவைகள்.
4. சமூக சேவையில் ஈடுபடும் அரசு சாரா
அமைப்புகளின் சேவைகள்.
5. இறுதி ஊர்வலம், புதைத்தல், எரித்தல், சவ அறை
சேவைகள்
6. விவசாய விளைபொருட்கள், தோட்டப் பயிர்கள்,
கால்நடை வளர்ப்பு, காடு வளர்ப்பு, பால் துறை, கோழி வளர்ப்பு போன்றவற்றுக்கு
நேரடியாக அளிக்கப்படும் சேவைகள்.
7. கடன் பத்திரங்கள் விற்பதும் வாங்குவதும்
(நேரடி விற்பனை மட்டும்)
8. வட்டி
9. முதலீடுகளுக்கான ஈவுத் தொகை
10. வங்கிகளுக்கிடையே அன்னியச் செலாவணி
பரிவர்த்தனைகள்
11. பொது போக்குவரத்து மூலமாக மக்களை அழைத்துச்
செல்லும் சேவை
12. வெளிநாடுகளுக்கு பொருட்களை அனுப்பும்
சேவை
13. பொருட்களை அனுப்பும் தொழிலில்
ஈடுபட்டுள்ளுவருக்கு வண்டி ஓட்டும் சேவை
14. சாலைகள், விமான நிலையங்கள், ரயில்வே,
போக்குவரத்து முனையங்கள் போன்றவை, அரசு கட்டிடங்கள் கட்டுதல், ஒற்றை வீடு கட்டிக்
கொடுத்தல், அனாதை விடுதிகள் கட்டுதல் போன்ற சேவைகள்.
15. குடியிருப்புக்காக வீடு வாடகைக்கு விடுதல்
(குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் மட்டும்)
16. பள்ளி கல்வி (நன்கொடைகள்
சேர்த்தியில்லை)
17. 4 கோடிக்குக் குறைவாக முந்தைய ஆண்டு வருமானம்
கொண்ட கிளினிக், மருத்துவமனை, உடல்நலம் பேணும் சேவைகள்.
18. காப்புரிமை சேவைகள்.
19. தன்னிச்சையாக செயல்படும் பத்திரிகையாளர்கள்
வழங்கும் சேவைகள்.
20. விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள்
அளிக்கும் சேவைகள்.
21. மத ரீதியான சேவைகள்
22. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அளிக்கும்
சேவைகள்
23. தொழிற்சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு
வழங்கும் சேவைகள்
24. வக்கீல்கள் தனி நபர்களுக்கு வழங்கும்
சேவை
25. தேசிய அல்லது பன்னாட்டு விருதுகள்
வழங்குதல்
26. கட்டணங்கள்
27. பெட் கட்டுதல் சூதாடுதல் தொடர்பான
சேவைகள்.
சேவை விலக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பட்டியலைப்
பார்க்கும்போது இதிலும், வங்கிகள், அரசு, நீதிமன்றம், அரசியல் கட்சிகள், முதலாளிகள்
முதலானோருக்குத்தான் ஆதாயம் அதிகம். மக்களைப் பொறுத்த வரை பேருந்தில் ஏறி,
கருமாதிக்கு போனால் மட்டுமே சேவை வரி இல்லை என்பதாக இருக்கிறது இந்த பட்டியல்.