ஹெல்மட்ட்டால் நெல்லையில் ஒரு பெரும் குழப்பம் ஏற்பட்டு விட்டது. கணவர் என
நினைத்து இன்னொருவருடன் பைக்கில் ஏறிப் போய் விட்டார் ஒரு பெண். பாதி வழியில்தான்
குழப்பம் புரிந்து வண்டியை நிறுத்தி இறங்கி தனது கணவரை அழைத்து அவருடைய வண்டியில்
அவர் சென்றார். தமிழகத்தில் ஹெல்மட் அணிவது கட்டாயம் என்று சட்டம் உள்ளது.
இருப்பினும் இது 90 சதவீதம் பேர் பின்பற்றுவதில்லை. அவ்வப்போது மாநகரங்களில்
ஹெல்மட் அணிவதை கட்டாயப்படுத்தி போலீஸார் நடவடிக்கைக எடுக்கின்றனர். பின்னர் இது
தொய்வடைந்து போய் விடுகிறது.
இந்த நிலையில் நெல்லையில் தற்போது ஹெல்மட்டை கட்டாயமாக்கியுள்ளனர். இதனால் ஒரு
பெரும் குழப்பம் ஏற்பட்டு விட்டது. நேற்று இரவு நெல்லை டவுன் பகுதியில் மின்தடை
அமலில் இருந்தது. அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் பலர் பெட்ரோல் நிரப்பிக்
கொண்டிருந்தனர். ஹெல்மட் அணிந்திருந்த ஒருவர் தனது மனைவியுடன் பெட்ரோல் போட
வந்திருந்தார். கணவர் பெட்ரோல் போடுவதற்காக வண்டியை நிறுத்தியபோது மனைவி கீழே
இறங்கி அருகில் காத்திருந்தார். அவருக்கு அருகே இரண்டாவது நபர் தனது மனைவியுடன்
பெட்ரோல் போட வந்திருந்தார். அவரது மனைவியும் இறங்கி நின்றார். இருவரது வாகனங்களும்
ஒரே வாகனம்.
இந்த நிலையில் பெட்ரோல் போட்டு முடித்த முதல் பைக் காரர், மனைவியை வண்டியில்
ஏறுமாறு கூறியுள்ளார். அப்போது அதைக் கேட்ட இரண்டாவது வண்டியில் வந்த பெண்மணி, தனது
கணவர்தான் கூப்பிடுகிறார் என்று நினைத்து முதலாமவரின் வண்டியில் ஏறி அமர்ந்தார்.
பின்னர் முதலாமவர் கிளம்பிச் சென்றார்.
இந்த நிலையில் பெட்ரோல் போட்டு முடித்த 2வது நபர், தனது மனைவியைக் காணாமல்
திடுக்கிட்டார். எங்கு போனார் என்பது தெரியாமல் செல்போனில் தொடர்பு கொண்டார்.
முதலாவமரின் பைக்கில் போய்க் கொண்டிருந்த 2வது நபரின் மனைவி, செல்போனை எடுத்துப்
பார்த்தபோது அது தனது கணவர் என்று தெரிந்தது. பைக் ஓட்டிக் கொண்டிருக்கும்போதே
எதற்குப் போன் என்று கணவரிடம் கேட்க, அவரோ, நான் எப்போது செய்தேன் என்று கூற குரல்
வேறு மாதிரியாக இருந்ததால் இருவரும் குழப்பமடைந்து வண்டியை நிறுத்தியுள்ளனர்.
ஹெல்மட்டைக் கழற்றிய பிறகுதான் அது வேறு நபர் என்று தெரிந்து அந்தப் பெண்
அதிர்ச்சி அடைந்தார். பிறகுதான் குழப்பம் எப்படி வந்தது என்பது புரிந்தது.
இதையடுத்து பெட்ரோல் பங்க்கில் காத்திருந்த கணவரை செல்லில் தொடர்பு கொண்டு நடந்த
குழப்பத்தைக் கூறி வரவழைத்தார் முதல் பெண். அவரும் விரைந்து வந்து தனது மனைவியை
அழைத்துக் கொண்டு கிளம்பினார். தனது நிஜமான மனைவியை பெட்ரோல் பங்க்கிலேயே விட்டு
விட்டு்ச் சென்ற முதல் நபரும் வேகமாக அங்கு சென்று அங்கே பரிதவிப்புடன் காத்திருந்த
தனது மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனார்.