முஸ்லிம் பெண்கள் பிழைப்புக்காக வெளிநாடு போகலாமா? |
ஐயமும்-தெளிவும் - முஸ்லிம்களுக்காக |
ஞாயிறு, 15 ஜனவரி 2012 13:59 |
ஐயம்:
assalamu alaikkum பொதுவாக, பெண்கள் வெளிநாடு போவது இஸ்லாத்தில் தடுக்கப் பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆயினும், குடும்பக் கஷ்டங்களினால் அவற்றைத் தாங்க முடியாது, அதே நேரம் யாரும் கஷ்டங்களைப் போக்க உதவி செய்யவும் இல்லை, அல்லது எதோ ஒரு சிறு உதவி செய்தாலும் அது போதாத நிலையில், பெண்கள் வெளிநாடு சென்று உழைக்க கிளம்புகிறார்கள். இப்படி, "முஸ்லிம் பெண்கள் வெளிநாடு சென்று உழைப்பது ஹராம்" என பல மவ்லவிகள் (முக்கியமாக தப்லீக், thawheed, salafi மவ்லவிகள்) கூறுகிறார்கள். ஆனால், இந்தப் பெண்களுக்கு நல்வாழ்வுக்குரிய மாற்று வழி தீர்வு எதுவும் சொல்கிறாரில்லை. கேட்டால், "கஷ்டத்தைப் பொறுத்துக்கொண்டு வாழ வேண்டும் இறைவன் சுவர்க்கம் தருவான்" என்று கூறுகிறார்கள். எனவே, பெண்கள் வெளிநாடு போய் உழைப்பது பற்றி, இஸ்லாத்தின் நிலைப்பாட்டை எழுதுங்கள். - சகோ. easternAHI மின்னஞ்சல் வழியாக தெளிவு: வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ், ஆணோ, பெண்ணோ வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைச் சகித்துக்கொண்டு, இறைவழியில் பொறுமையை மேற்கொண்டால் இறைவன் சுவர்க்கத்தைத் தருவான் என்பது உண்மையே. அதேபோல், ஜீவாதாரத் தேவைக்காக வாழ்க்கையில் எதிர் நீச்சலை மேற்கொண்டு கஷ்டப்பட்டு "உழைத்து நேர்மையுடன் பொருளீட்டினாலும் சுவர்க்கத்தைத் தருவேன்" என்பதும் இறைவனின் வாக்குறுதி! ஆணாயினும் பெண்ணாயினும் ''உழைப்பது ஹராம்'' என்று இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை! ஆனால், இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, ஃபிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள் வளைகுடாவில் பிழைக்கப்போய், அவர்களுள் பலர் அனுபவிக்கும் கொடுமைகளைக் கருத்தில் கொண்டு, "பெண்கள் பிழைப்புக்காக வெளிநாடு செல்வது ஹராம்" எனச் சிலர் கருத்துக் கூறியிருக்கலாம். தங்கள் வீட்டு வேலைக்காரப் பெண்களைத் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக நடத்துகின்ற, அவளுடைய குடும்பத்தின் அத்தனை தேவைகளையும் தம் தேவைகளாக ஏற்றுச் செயல்படுகின்ற இறையச்சம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. முஸ்லிம் பெண்கள், பிழைப்புத் தேடி வெளிநாட்டுக்குப் போகவேண்டிய கட்டாயத் தேவையையும் சூழலையும் பற்றி இங்குத் தெரிந்து கொள்ள வேண்டியது நமது கடமையாகும். "ஆண்கள் பெண்களிடம் ஆளுமையுடையவர்கள்" எனும் கருத்தில் அமைந்த 4:34ஆவது இறைமறை வசனத்தில், ஒரு குடும்பத்திற்கான பொருளாதாரச் செலவினங்களுக்கு அந்தக் குடும்பத்தின் தலவனே பொறுப்பேற்கத் தகுதியுடையவனாவான் எனும் அடிப்படை பொதிந்துள்ளது. ஆனால், ஒரு குடும்பப் பெண்ணுக்கு ஊதாரியான, குடும்பப் பொறுப்பற்ற கணவன் அமைந்துவிட்டாலோ, மணமாகி குழந்தைகளைப் பெற்றபின் கணவன் இறந்துவிட்டாலோ அந்தக் குடும்பத்தைப் பொறுப்பேற்க எவரும் இல்லாமல் அல்லது இருந்தும் முன்வராமல் போய்விட்டாலோ பெண்கள் சம்பாதித்து அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய இக்கட்டான கட்டாயச் சூழல் ஏற்படுகின்றது. அதனால், ஆதரவற்ற பெண்கள் குறுகிய காலத்தில் பொருளீட்ட ஆசைப்பட்டுத் தேர்ந்து கொள்வது 'வெளிநாட்டு வேலை'. ''பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக்கொள்ளுங்கள்!'' (அல்குர்ஆன் 62:10) இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான அனுமதியாகும். அயல்நாடு சென்று ஆண்கள் உழைப்பதுபோல், பெண்களும் அயல்நாடு சென்று ஹலாலாக உழைத்துச் சம்பாதிப்பதும் ஆகுமானதே! பெண்களுக்கான வாழ்வாதாரத் தேவைகளைக் குடும்பத்து ஆண்கள் பூர்த்தி செய்திடல் வேண்டும் என்பதுபோல், ஆதரவற்றப் பெண்கள், சிறுவர், பலவீனமான முதியோர் ஆகியோருக்கு இஸ்லாமிய அரசு பொறுப்பேற்க வேண்டும்! "கடன் உள்ள நிலையில் மரணித்தவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுவார்கள். "இவர் கடனை நிறைவேற்றத்தக்க சொத்துகளை விட்டுச் சென்றுள்ளாரா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்பார்கள். அவர் விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டால் அவருக்கு(ஜனாஸா)த் தொழுகை நடத்துவார்கள். அவ்வாறு இல்லையெனில் முஸ்லிம்களை நோக்கி ''உங்கள் தோழருக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று கூறிவிடுவார்கள் (புகாரி 5371). அல்லாஹ் அவர்களுக்கு அநேக வெற்றிகளை வழங்கியபோது (அதாவது அரசுக் கருவூலத்தில் நிதிகள் குவிந்தபோது) "மூஃமின்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நான் மிகவும் உரித்தானவன். எனவே மூஃமின்களில் யாரேனும் கடனை விட்டு மரணித்தால் அதை நிறைவேற்றவது என்னைச் சேர்ந்ததாகும். யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசுகளுக்கு உரியதாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 2298, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்). ஒருவர் (மரணமடைந்து) விட்டுச் சென்ற செல்வம் அவரின் வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் (ஆதரவற்ற) மனைவி மக்களைவிட்டுச் சென்றால் அவர்களைப் பராமரிப்பது நம்முடைய பொறுப்பாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (புகாரி 2398). கணவன் மரணித்து, குடும்பத்தில் ஆண் ஆதரவற்று மனைவி, மக்கள் நிர்க்கதியான நிலையில் விடப்படும்போது அவர்களைப் பராமரிப்பது நமது பொறுப்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதாவது, ஆதரவற்ற பலவீனமானவர்களைப் பராமரிப்பது இஸ்லாமிய ஆட்சியின் பொறுப்பாகும்! சொந்த உழைப்பில் குடும்பத்தை நடத்தவேண்டிய கட்டாயத்திலிருக்கும் பெண்களுக்கு, "வெளிநாட்டுக்குச் சென்று பிழைக்கக்கூடாது" என்று தடைவிதித்தல் பொருந்தாது. ஏனெனில், எல்லா அடிப்படை வசதிகளையும் பெண்களுக்கு அளித்துவிட்டு, அதன்பிறகு, "வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாட்டுக்குப் போகாதே!" என்று தடுக்கும் உரிமை இஸ்லாமிய அரசுக்குத்தான் உண்டு! வறுமையால் வாடும் பெண்களுக்கு, அவர்களுக்கான எந்த உதவியும் செய்யாமல், உள்ளூரில் பிழைத்துக்கொள்ள வழிவகை தேடாமல், வெறுமனே ஃபத்வா கொடுப்பது நியாயமில்லை. "முஸ்லிம் பெண்கள் பிழைப்புக்காக வெளிநாட்டுக்குப் போவது ஹராம்" என ஃபத்வா கொடுப்பவர்கள், ஆதரவற்ற பெண்களுக்கு உள்ளூரிலேயே உள்நாட்டிலேயே பாதுகாப்பான வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுக்க முன்வந்தால் பாராட்டலாம். ஆனால், அது ஆகப்போவதில்லை என்று உங்கள் கேள்வியிலிருந்து விளங்குகிறது. எனவே, ஆதரவற்ற பெண்கள் அரசு அல்லது ஜமாஅத்தாரின் உதவியற்ற நிலையில், தன் கையே தனக்கு உதவி என உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் சூழ்நிலைக்கு ஆளாகின்றனர். உள்ளூர், வெளிநாடு என இவர்கள் உல்லாசப் பயணமாகச் செல்லவில்லை. உழைத்துப் பொருளீட்டுவதற்காக செல்கின்றனர். அதுவும் வெளிநாட்டுக்குச் சென்றுவந்த, தம் நிலையை ஒத்தவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்துகொண்டே பெரும்பாலும் செல்கின்றனர். எனவே, வெளிநாட்டுக்குப் பிழைப்பைத் தேடிப் போவதா வேண்டாமா என்பது அவரவரின் தேவை, கட்டாயம், நிர்ப்பந்தம், பயன், பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அப்பெண்கள் தீர்மானிப்பதாகும். மற்றபடி, உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஹலாலான முறையில் உழைத்துப் பொருளீட்டிக் கொள்வதற்கு இஸ்லாம் பெண்களுக்குத் தடை விதிக்கவில்லை. (இறைவன் மிக்க அறிந்தவன்) |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக