Posted by Ayushabegum
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பொதுவாக எல்லா இடங்களிலும் சொல்லப் படும் ஒரு குற்றச்சாட்டு, இஸ்லாத்தில் பெண்கள் எல்லா விசயத்திலும் பார பட்சமாக நடத்த படுகிறார்கள் என்றும்..! அதிலும் முக்கியமாக சொத்து விசயத்தில் மிக அதிகமாகவே அவர்களுக்கு பாரபட்சம் காட்ட படுகிறது என்பதாகும்.! மேலும் அநேக விசயங்களில் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான உரிமைகள் தான் வழங்கப் படுகிறது என்றும் பரவலாக சொல்ல படுகிறது..உண்மையில் அப்படித் தான் நம் மார்க்கத்தில், நமக்கு சொல்ல பட்டிருக்கிறதா, என்பதை பார்ப்போம்..!
அதற்கு முன் பெண்கள்,ஆண்களால் எப்படி நடத்தப் பட்டார்கள் (இப்போதும் கூட) என்பதை நாம் சற்று கவனிக்க வேண்டும்..! அன்றைய கால கட்டத்தில் பெண்கள் வெறும் போக பொருளாகவும், அவர்களுக்கு, என்று தனி மதிப்போ,அந்தஸ்தோ,இல்லாதது மட்டும் அல்லாமல் ,ஆண்களின தேவைகளை பூர்த்தி செய்யும் அடிமைகளாகவும்,அவர்களால் கீழ் நிலை பிறவிகளாகவும்,வியாபார பண்ட மாற்றுப் பொருளாகவும்,நடத்தப் பட்டார்கள் என்றால் அது மிகையில்லை..உதாரணமாக,ஆண்களும்,பெண்களும்,செய்யும் ஒரே தவறுக்கு,ஆணுக்கு ஒரு நீதியும்,பெண்ணுக்கு ஒரு நீதியும் ,வழங்கப் பட்டு வந்தது, அன்றைய காலத்தில்..! இப்படி எல்லா இடங்களிலும் பெண்கள் மோசமாகவும்,கொடுமையாகவும், நடத்தப் பட்டார்கள்..!
அதே போல ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் போது அவள் எப்படி ஆணுக்கு சொந்தம் ஆவாளோ, அதே போல அவளின் உடைமைகளும் அவளின் கணவனுக்கு சொந்தம் ஆகி விடும்.திருமணத்திற்கு பின் அவைகளின் மீது அவளுக்கு எந்த உரிமையும் இருக்காது .கணவரின் அதிகாரத்தின் கீழ் தான் அவைகள் இருக்கும் .அவர் இஷ்டப் படி அதை அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.அவரை யாரும் ஒன்றும் சொல்ல முடியாது.சொல்ல போனால்,மனைவி என்பவள் ஒரு வகையில் அவளின் கணவனால் விலை கொடுத்து வாங்க பட்ட ஒரு பொருளை போன்றவள்..! அவ்வளவு தான் அன்று அவளுக்கு மதிப்பு இருந்தது.
பெண்களுக்குக் கடமைகள் இருப்பதுபோல அவர்களுக்கு உரிமைகளும்
சிறந்த முறையில் உள்ளன. (2:228)
ஆனால் ஒரு சமுதாயத்தில்,அது எந்த துறை ஆகட்டும்,எந்த ஒரு அழகான மாற்றம் நிகழ்வதாக இருக்கட்டும், ஒரு பெண்ணின் துணை இல்லாமல் ஒரு சரியான சமூக திட்டத்தை கொண்டு வர முடியாது..சமூக வாழ்வில் ஆண்,பெண் இருவரின் சம அளவினான புரிதலான பங்கு என்பது முக்கியமானது..ஆனால் அன்றைய கால காட்டத்தில் பெண்ணுக்கான உரிமைகளோ.கௌரவமோ,சரியான விதத்தில் அளிக்க படவில்லை..! இன்னும் சொல்லப் போனால் பெண் பிள்ளைகள் பிறந்தாலே அது ஒரு சாபக்கேடு எனக் கருதி ,உயிருடன் புதைக்கப் பட்டார்கள்..!
உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம்பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். (4:12)
ஆனால் இங்கு சொத்து விசயத்தில் விமர்சகர்களின் குற்றச்சாட்டு என்பது ஆணுக்கு இரண்டு பங்கும்,அதே சமயத்தில் பெண்ணுக்கு ஒரு பங்கு தான் சொல்லப் பட்டிருகிறது என்பதாகும்..இது பெண்ணுக்கு இஸ்லாம் காட்டும் பாரபட்சத்தின் வெளிப்பாடு என்பது அவர்களின் கூற்று. இதை பொதுவாக வெளியில் இருந்து மேலோட்டமாக பார்க்கும் யாருக்கும் அப்படி தான் தோன்றும்..ஆனால்,எதற்காக ,பெண்ணுக்கு அப்படி சொல்ல பட்டது,அதன் காரணம் என்ன,என்பதை புரிந்து கொண்டால் தெளிவு கிடைக்கும்..!
அதற்கு முன் நாம் புரிந்து கொள்ள வேண்டிய,அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விசயம் .இறையின் பார்வையில் ஆண்களும்,பெண்களும் சமமானவர்கள் தான் ,இதில் எந்த வித சந்தேகமும் இல்லை.மேலும் அவர்கள் இருவருக்கும், அவர்கள் இவ்வுலகத்தில் செய்கின்ற நன்மை,தீமை வைத்தே தீர்ப்பு வழங்கப் படும் என்றும்,இதில் ஆண்,பெண் வேறுபாடு இல்லை என்பதும்,இதில் எந்த விதத்திலும் ,அணு அளவும் அவர்களுக்கு தீங்கு செய்யப் பட மாட்டாது என்பது இறைவனின் வாக்கு..
ஆனால் அதே நேரத்தில் இருவரும் சமமானவர்களே தவிர,சரி நிகரானவர்கள் அல்ல..! அப்படி இருப்பதற்கான வாய்ப்பும் இல்லை.உடல்,உணர்வு,இயல்பு,செயல் என இயற்கையாகவே இருவரின் தன்மைகளும் வேறு பட்டவை.அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக,அவர்களின் குணப்படி மேன்மை படுத்தப் பட்டுள்ளார்கள்..! அதே போல இருவரின் பொறுப்புகளும்,கடமைகளும், வேறு பட்ட தன்மைகளாக பிரித்து காட்டப் பட்டுள்ளது..
ஆணின் பொறுப்பு என்பது குடும்பத்தின் முழு பொருளாதார தேவையின் அடிப்படையில் அமைந்தது..! குடும்பத்தினருக்கான செலவினங்கள் தொடர்பான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்பவனாக ஒரு ஆண் இருக்கிறான்.அது அவனுக்கு கட்டாய கடமையாகவும் ஆக்கப் பட்டுள்ளது.பெண்ணின் பொறுப்பு என்பது குடும்பத்தை நிர்வாகம் செய்யக் கூடிய விதமாகவும்,குழந்தை வளர்ப்பு ,இன்ன பிற உறவு சார்ந்த பேணுதலையும் கொண்ட,இல்லம் சார்ந்த பொறுப்பாக இருக்கிறது..! இது ஒரு பெண்ணின் கட்டாய கடமையாக ஆக்கப் பட்டுள்ளது..! மறுமையில் இது குறித்து இருவரும் அவரவர் கடமை களைப் பற்றி விசாரிக்கப் படுவார்கள் என்பது இறைவனின் வாக்கு..
உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.(4:11)
இந்த வசனத்தை வைத்துத் தான் இஸ்லாம் பெண்ணுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னாலும் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என பாரபட்சம் காட்டுகிறது என பரவலாக விமரிசிக்கப் படுகிறது.ஆழ்ந்து நோக்கினால் மார்க்கம் எந்த அளவு ஒரு பெண்ணுக்கு பொருளாதார பாதுகாப்பையும்,தனி அந்தஸ்தையும் கொடுத்துள்ளது என்பது புரியும்.முன்பே சொன்னது போல ஒரு ஆணுக்கு தான் குடும்பத்தினரின் பொருளாதார தேவைகளை ஆற்ற வேண்டிய பொறுப்பு கடமை ஆக்கப் பட்டுள்ளது..தன் பெற்றோர்களின் அத்தியாவசிய தேவைகள்,தனக்கு திருமணம் செய்யும் போது ஆகும் செலவுகள்,தன் சகோதர,சகோதரிகளின்,கல்வி,உடை, போன்ற அடிப்படை வசதிகள்,தனக்கென வரும் மனைவி,குழந்தைகள்,மற்றும் உற்றார்,உறவினர்களுக்கு ஆகும் செலவுகள் என அனைத்தையும் பார்க்க கூடிய கடமை ஆணையேச் சாரும்..
அதே சமயத்தில் ஒரு பெண்ணுக்கு எந்த விதமான பொருளாதார கடமைகளும் அவளுக்கு சுமத்தப் பட வில்லை...! அவளின் சொத்தை அவள் விரும்பிய படி செலவு செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது..! அதே போல அவள் சம்பாதிக்கும் பணமும் அவளுடையதாக இருக்கிறது...! அதை அவள் விரும்பிய படி செலவு செய்யவும் அனுமதிக்கப் பட்டுள்ளது...! ஆனால் அவளின் விருப்பப் படி எந்த விதமாக செலவு செய்தாலும்,அந்த செலவு சரியான விதத்தில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவளுக்கு சொல்லப் பட்டதாகும்..ஏனென்றால் நாளை எல்லா செயல்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை அவளுக்கு இருக்கிறது..!
பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும் போது அவனுக்குச் சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. அவளுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் (அவள் இறக்கும் போது) அவ(ளது சகோதர)ன் அவளுக்கு வாரிசாவான். இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டுபெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழி தவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன். (4:176)
அதே சமயத்தில் ஒரு பெண்ணுக்கு எந்த விதமான பொருளாதார கடமைகளும் அவளுக்கு சுமத்தப் பட வில்லை...! அவளின் சொத்தை அவள் விரும்பிய படி செலவு செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது..! அதே போல அவள் சம்பாதிக்கும் பணமும் அவளுடையதாக இருக்கிறது...! அதை அவள் விரும்பிய படி செலவு செய்யவும் அனுமதிக்கப் பட்டுள்ளது...! ஆனால் அவளின் விருப்பப் படி எந்த விதமாக செலவு செய்தாலும்,அந்த செலவு சரியான விதத்தில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவளுக்கு சொல்லப் பட்டதாகும்..ஏனென்றால் நாளை எல்லா செயல்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை அவளுக்கு இருக்கிறது..!
உதாரணத்திற்கு இரண்டு பிள்ளைகளை (ஒரு ஆண், ஒரு பெண்) உடைய ஒரு தகப்பனார் இறந்துவிட்டார் எனில், அவரிடம் மூன்று லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தால், அவரின் மகனுக்கு இரண்டு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களும், மகளுக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களும்,அவர்களது பங்காக கிடைக்கும்...! இரண்டு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக கிடைக்கப் பெற்ற மகனுக்கு குடும்பத்தில் உள்ள எல்லா செலவினங்களின் மீதும் பொறுப்பு உண்டு. .! அவருக்குக் கிடைக்கப் பெற்ற இரண்டு லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் முழுவதையுமோ,அல்லது அந்த சொத்துக்களில் பெரும் பங்கையோ அவர் குடும்பத்திற்காக,செலவு செய்துவிட்டு எஞ்சியுள்ள சொத்துக்களை மாத்திரம் தான், அவர் தனது பங்காக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்ற மகள் அதிலிருந்து ஒரு பைசா கூட எவருக்கும் செலவு செய்யாது ,முழு மதிப்புள்ள சொத்தையும் தனக்காக வைத்து கொள்ள முடியும்...அவரை யாரும் ஒன்றும் கேட்க முடியாது..அவராக விருப்பப் பட்டு தன் குடும்பத்திற்கு செலவு செய்யலாம்.ஆனால் கட்டாய கடமை இல்லை..! இதில் இருந்தே இஸ்லாம் எந்தளவு ஒரு பெண்ணுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்கி உள்ளது என்பதும்,இந்த பங்கீட்டு முறையினால் யார் அதிக அளவு பலனை அடைகிறார்கள் என்பது புலப்படும்.
குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும்,உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப் பங்கீடு கட்டாயக் கடமை.(4:7)
அதே நேரத்தில்,இன்றைய காலகட்டத்தில், நம் நடைமுறை வாழ்க்கையில் இந்த பங்கீடுகள் சரியான முறையில் குடும்பத்தினரால் தன் பெண்களுக்கு வழங்கப் படுகிறதா, எனக் கேட்டால், நாம் மிக பெரிய கேள்விகுறியை தான் பதிலாக வைக்க முடியும்..! இஸ்லாத்தை பற்றி சரியாக அறியாதவர்கள் செய்யும் தவறுகள் என்பதைத் தாண்டி, அறிந்தவர்கள் பலரும் தெரிந்தே, இத் தவறைச் செய்வது மிகவும் வருந்தத் தக்கதே..! நிச்சயமற்ற இந்த உலக வாழ்க்கையின் மீது உள்ள ஆசை மனிதனை தெரிந்தே பல தவறுகளை செய்ய வைக்கிறது என்றால் அது மிகையில்லை...தன் தந்தையின் சொத்துக்களை,உரிய முறைப் படி தன் சகோதரிகளுக்கு பங்கீடு செய்யாமல, தானே வைத்து கொள்ளும் சகோதரர்கள் தான் இங்கு அதிகம்..! இந்திய-தமிழக முஸ்லிம் பெண்களின் நிலையில் அதிக முன்னேற்றம் இல்லாததற்கு சொத்துப் பங்கீடு சரியான முறையில் நடக்காததும், இந்தியக் கலாச்சாரத்தை ஒட்டி, பெண்களின் நகை, சொத்தை கணவன் வீட்டார் உரிமை கொண்டாடுவதும் காரணமாக அமைந்துள்ளது. தவறு இஸ்லாமிடம் இல்லை, அதைச் செயல்படுத்தாத ஆண்களிடம்தான்! இந்த உலகத்து வாழ்க்கையும்,வசதிகளும் நிரந்தரம் என்பதை போன்ற அவர்களின் செயல்களால் நஷ்டமடைய போவதென்னமோ அவர்கள் தான்..
இது போன்ற நேர்மை இல்லாத செயல்களில் இருந்து நம்மை விடுவித்து, நாளை அவன் முன் குற்றமற்றவர்களாக நிற்க,வல்ல இறைவன் நமக்கு அருள் புரிவானாக..ஆமீன்..
இது போன்ற நேர்மை இல்லாத செயல்களில் இருந்து நம்மை விடுவித்து, நாளை அவன் முன் குற்றமற்றவர்களாக நிற்க,வல்ல இறைவன் நமக்கு அருள் புரிவானாக..ஆமீன்..
உங்கள் சகோதரி..
ஆயிஷா பேகம்.. thanks
ஆயிஷா பேகம்.. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக