புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது,
நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், இறைவனை நினைவு கூர்தல், தர்மம் செய்தல், சொல்-செயல்-எண்ணங்கள் அனைத்திலும் இறையச்சத்தைப் பேணுதல் என நிம்மதியும் அமைதியும் நிறைந்த ஒரு சூழலை ரமலான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது. ரமலானின் முழுப் பலன்களையும் பெற்றிடும் விதத்தில் முஸ்லிம்கள் முயலும் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் கழிகின்றது, அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் ரமளானை நமக்கு அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே.
கடமையான ஐவேளை தொழுகைகளையே தொழாதவர்கள், பள்ளிகளில் சென்று ஜமாத்தோடு தொழாமல் வீடுகளில் தொழுது கொண்டிருந்தவர்கள், உரிய நேரத்தில் பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழவும் பள்ளிக்கு பாங்கு சொன்ன உடன் அல்லது பாங்கிற்கு முன்னரே வருகை புரிந்து தொழுகைக்குக் காத்திருந்து, பள்ளியில் குர்ஆன் ஓதிக் கொண்டும் உபரியான தொழுகைகள் தொழுது கொண்டும் கடமைத் தொழுகையை எதிர்பார்த்தவர்களாக இருக்கும் நிலையையும் காணலாம்.
இந்தப் பக்திப் பரவச நிலை புனித ரமலான் ஒரு மாதத்தில் மட்டுமின்றி தினந்தோரும் இருப்பதுபோல் அனைவரின் உள்ளத்திலும் இவ்வுணர்வு குடிகொண்டு, அதன் மூலம் வெளிப்படும் வணக்க வழிபாடுகளும் இதர அன்றாடச் செயல்பாடுகளும் அமைந்து விட்டால், இம்மைக்கும் மறுமைக்கும் நன்றன்றோ எனும் ஆவலும் எண்ணமும் நமக்கு ஏற்படுகின்றது. இந்நிலையை நமது வாழ்க்கையில் ரமலானில் மட்டுமின்றி ரமலானுக்கு பின்னரும் தொடர்ந்து கடைப்பிடித்திட அல்லாஹ் அருள் புரியவேண்டும்.
இந்த கண்ணிய மிக்க மாதத்தின் முப்பது நாட்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள் என்று கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னு குஜைமா பாகம் 3 எண் 191
இந்த ஹதீஸின் அடிப்படையையும் நாம் கவனத்தில் கொண்டு முதலாவது பத்து நாட்களில், அதிகமதிகமாக அல்லாஹ்விடம் துவாச் செய்து அவனால் வழங்கப்பட்ட உயிர், பொருள், இதர செல்வங்கள், கல்வி, அறிவு, ஆற்றல்கள், திறமைகள், பார்வை, செவி, புலன், நுகர்தல், உணர்தல் போன்ற அனைத்து விதமான அருட் கொடைகளையும் நினைவு கூரவும் அவற்றிற்கு முறையாக நன்றி செலுத்திடவும் அதன் மூலம் மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அதிகமதிகமான அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறவும் முயல வேண்டும்,
இவை எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கு அல்லாஹ்வினால் சிறப்பாக வழங்கப்பட்ட (ஈமான்) எனும் இறை நம்பிக்கை' என்ற அருட்கொடைக்கு மட்டுமே கோடி கோடி நன்றி செலுத்தினாலும் காலமெல்லாம் அவனைப் புகழ்ந்தாலும் ஈடாகாது. ஏனெனில் ஈமான் என்ற இணையற்ற அருட்கொடை இல்லா விட்டால் நாம் பெற்றுள்ள இதர எந்த வளமும் உண்மையில் அருட்கொடையில்லை எனலாம்.
இறை நம்பிக்கை இல்லாத நிலையில் செல்வம் எனும் அருட் கொடை அதிகமானால் அவனை அது வழி கேட்டிற்கும் தீமைகளுக்கும் இட்டு சென்று விடும் வாய்ப்புகள் உண்டு. கல்வி மற்றும் அறிவு எனும் அருட்கொடைகள் ஆக்கத்தையும் அழிவையும் பிரித்துணராமல் கேடாக அமைந்திட வழிவகுக்கும் அபாயம் உண்டு. உடல் அழகு, வலிமை, திறமை, ஆற்றல்கள், அதிகாரம் போன்றவை ஈமான் எனும் இறை நம்பிக்கையில்லாத நிலையில் கிடைக்கப் பெற்றால் அவற்றைத் தவறான வழியில் மனோ இச்சையின்படி ஈடு படுத்திட அதன் மூலம் தமக்கும் தம்மை சுற்றியிள்ளோருக்கும் கேடும் இழப்பும் ஏற்படுத்திட வாய்ப்புகள் அதிகம். ஈமான் (இறைநம்பிக்கை) மற்றும் இறையச்சம் என்பதுதான் உண்மையில் அருட்கொடை.
இரண்டாவது பத்தில் முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆகவேண்டும். அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செயல்க)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப) வாழ்வேயன்றி வேறில்லை. (அல் குர் ஆன் 3 : 185)
இம்மை எனும் நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையின் மாயையிலும் அலங்காரங்களில் மூழ்கி உலகமே சதம் எனும் போக்கில் அதனைப் பெருக்கும் பேராசையில் தமது சொந்த ஆசாபாசங்களுக்கும் மனோயிச்சைகளுக்கும் தமது குடும்பத்தினர்களுக்கும் வாரிசுகளுக்கும் என்று அயராமல் உழைத்து மனிதன் சம்பாதிக்கும்-செலவிடும்-சேமிக்கும் ஒவ்வொன்றிலும் மறுமை வாழ்க்கையை மறந்து, மனம் போன போக்கில் இறை வரம்புகள் மீறப்பட்டு அல்லது உதாசீனப் படுத்தப்படுமானால், மிகப்பெரும் வாழ்க்கை வசதிகளும் இன்பங்களும் பேரும் புகழும் சகல துறைகளில் வெற்றிகள் பெற்றாலும் அது உண்மை வெற்றியாகாது. நிலையான மறுமை வாழ்க்கையின் வெற்றியே உண்மை வெற்றி என்பதை வலியுறுத்தும் மேற்கண்ட இறைவசனத்தை எந்நேரமும் மனதில் நிறுத்தி இவ்வெற்றியை பெற்றிட நமது அயராத முயற்சிகள் தியாகங்கள் அர்ப்பணிப்புகள் மூலம் செயல் படவேண்டும்.
"எவர் ஒருவர் ரமலான் மாதத்தைப் பெற்று அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்பு கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும்" என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் துவா செய்தபோது நபி (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறியதாகக் கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது. இதுவும் நமக்கு ரமலானின் துவாக்களில் பாவமன்னிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது:
"நீங்கள் மிம்பருக்கு அருகில் செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது 'ஆமீன்" என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்" என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்" என்றனர்.
இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட(க்கோர)வில்லையோ அவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள், நான் ஆமீன் என்றேன். 'உங்கனைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள். நான் ஆமீன் என்றேன். 'தனது பெற்றோர்களிருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று (அவர்களுக்கு சேவை செய்து) யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள். நான் ஆமீன் என்றேன் என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஃபு பின் உஜ்ரா (ரலி), நூல்: ஹாகிம்)
மூன்றாவது பத்து நாட்கள் நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும் என்று கூறும் இந்த நபிமொழியின் அடிப்படையில், முதலில் அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையை தண்டனையும் உணர்ந்திட கீழ்க்கண்ட குர்ஆன் வசனத்தையும் நபி மொழிகளையும் பார்க்கவும்.
அல்லாஹ் அல் குர்ஆனில்,
நம் வேதவசனங்களை நிராகரிக்கின்றவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். ( அல் குர் ஆன் 4 : 56 ) என்று எச்சரித்துள்ளதையும் மேலும் நரகத்தின் கொடுமையை உணர்த்தும் கீழ்க்கண்ட வசனங்கள் அதன் கொடுமையை அஞ்சி அதை விட்டுத் தப்பிடும் விதமாக வாழவேண்டியதை நினைவூட்டும் ஓர் அறிய அச்சுறுத்தல் கலந்த உபதேசம் ஆகும்.
திண்ணமாக, நரகம் வலைவிரித்துக் காத்துக் கிடக்கின்றது - வரம்பு மீறியவர்களின் வாழ்விடமாக! அதில் அவர்கள் ஊழியூழிக் காலம் வீழ்ந்து கிடப்பர். அங்கு, குளிராக-குடிப்பாக எதையும் அவர்கள் சுவைக்கப் போவதில்லை - கொதியூட்டப் பட்ட நீரையும் சீழையும் தவிர. அவர்களுக்கு அவை தகுமான கூலிதாம். (ஏனெனில்,) கணக்குத் தீர்க்கும் நாளை அவர்கள் எதிர்பார்க்காமல் (மறுத்து) வாழ்ந்தனர். மட்டுமின்றி, நம் சான்றுமிகு வசனங்களை முற்றும் பொய்யெனக் கொண்டனர். ஒன்று விடாமல் நாம் அனைத்தையும் கணக்காய்ப் பதித்து வைத்தோம். எனவே, (மறுத்து வாழ்ந்தவர்களே!) அனுபவியுங்கள்; நாம் உங்களுக்கு அதிகப் படுத்தவிருப்பதெல்லாம் வேதனையைத் தவிர வேறன்று. (அல் குர் ஆன் 78:21-30)
நபிமொழி
"இறைவனை அஞ்ச வேணடிய அளவுக்கு அஞ்சுங்கள்! முஸ்லிம்களாக தவிர மரணிக்காதீர்கள் என்ற (3 : 102) வசனத்தை நபி(ஸல்) ஓதினார்கள். பிறகு (நரக வாதிகளுக்குக் கொடுக்கப்படும்) ஸக்கூம் எனும் மரத்திலிருந்து ஒரு துளி இவ்வுலகில் சிந்தப்பட்டால் இவ்வுலக வாசிகளின் வாழ்க்கையையே அது சீரழித்து விடும் என்று கூறிவிட்டு அதுவே உணவாகக் கொடுக்கப்படும் (நரகவாசிகளின் நிலை) எப்படி இருக்கும்!? என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா
நரகவாசிகளில் இலேசான தண்டனைக்குரியவரது உள்ளங்கால்களில் தீக்கங்குகள் வைக்கப்படும். அதனால் மூளை கொதிக்கக் கூடியவராக அவர் இருப்பார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ
நீங்கள் மூட்டும் நெருப்பு நரகத்தின் வெப்பத்தில் எழுபதில் ஒரு பங்காகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ
இவற்றை நினைவில் எந்நேரமும் நிறுத்தி அல்லாஹ் எச்சரித்துள்ள நிரந்தர நரகத்திற்குரிய ஷிர்க் இணைவைத்தல், (4 : 48,116) வட்டி வாங்குதல் (2 : 275-278), போன்றவற்றை உடன் கைவிட வேண்டும், மேலும் நரகத்தின்பால் நெருக்கம் ஏற்படுத்தும் இதர எல்லாவிதமான பாவமான சொல், செயல்களில் இருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் பொருள் ஈட்டலிலிருந்தும் தம்மை முழுமையாக தடுத்துக் கொள்ள உறுதி பூண்டு,(17 : 28-31) நிகழ்ந்து விட்டவைக்கு வருந்தி அதில் மீண்டும் செல்லக்கூடிய வழிகளை கைவிட்டு நரகத்தின் வேதனையிலிருந்து பாதுகாவல் தேட வேண்டும். குர்ஆனில் வசனங்களைப் பார்க்க.
மேலும் அல்லாஹ்வின் உபதேசம் தொடர்கிறது:
முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் இடுகின்ற கட்டளைகளில் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்வார்கள். (அல் குர்ஆன் 66 : 6)
மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொள்ளும் தாங்க இயலாத பயங்கரமான வேதனையாம் நரகத்திலிருந்து நாமும் நம் பொறுப்பில் உள்ள நம் குடும்பத்தினரும் முழு மனித சமுதாயமும் மீட்சியையும் பாதுகாப்பும் பெறக்கூடிய விதத்தில் நாம் என்றென்றும் தியாக மனப்பான்மையுடனும் இஸ்லாமிய இறை வரம்பினுள்ளும் அவற்றின் அடிப்படைக்குச் சிறிதும் மாற்றமில்லாத விதத்திலும் மன உறுதியுடனும் தெளிவுடனும் செயல்பட முனைய வேண்டும்.
உதாரணமாக ஒரு சிலர் இம்மை-மறுமை வாழ்க்கை செம்மைபெற முறையாக முயல்வதும் இறைவனைத் வேண்டி தொழுவதும் தொழுது முடித்த பின்னர் நீண்ட நேரம் இரு கரமேந்தி அல்லாஹ்விடம் பிராத்தித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
இன்னும் சிலர் அவசர அவசரமாக தொழுது முடித்தவுடன், பிராத்தனைகளை முடித்துக் கொண்டு அல்லது துவா எனும் இந்த பிராத்தனையே செய்யாமல் வெளியேறி விடுகின்றனர். நபி (ஸல்) அவர்கள், "அத்துவாஉ ஹுவல் இபாதா - துவா என்பதே ஒரு வணக்கமாகும்" என்று கூறியுள்ளார்கள் என்பதை நாம் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் நினைவில் வைத்து அல்லாஹ்வைப் புகழ்ந்து, நமது அனைத்துத் தேவைகளையும் கேட்க வேண்டும். நமது தேவைகளை நிறைவேற்ற வல்ல ஒருவன் அவனே! நாம் கேட்டும் கேட்காமலும் நமக்கு எல்லாம் வழங்கிய, வழங்கிடும் கருணையாளன் அவனே! கஷ்டங்கள், நோய்கள், துயரங்கள், சோதனைகள் அனைத்தையும் நீக்க வல்லவன் அவன் ஒருவனே! என்றும், அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்து விட்ட குற்றங்கள், குறைகள், பாவங்கள் என்று எல்லாவற்றையும் மன்னித்தருளக் கூடியவன் அவனே! என்றும் முறையாக உள்ளத்தால் நம்பி, எல்லாம் வல்லவனாகிய அல்லாஹ்விடம் மனமுருகி சமர்பித்து நாமறிந்த மொழியில் நமக்காகவும் நமது குடும்பத்தினருக்காகவும் உலக முஸ்லிம்களுக்காகவும் ஈருலக வெற்றியையும் ஈடேற்றத்தையும் கேட்க வேண்டும். மிகப் பெரும் இழப்பும் வேதனையுமாகிய நரக நெருப்பில் இருந்து பாது காப்பும் தேடவேண்டும்.
எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" (அல்குர்ஆன் 2 :201)
அதே போல் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த அந்தஸ்தான சுவனத்தில் இடம் வேண்டியும் பணிவுடனும் மனமுருகியும் நம்பிக்கையுடனும் பிராத்திக்க வேண்டும். அவற்றின்பால் கொண்டு செல்லும் நற்செயல்களில் தொடர்ந்து இறுதி மூச்சுவரை ஈடுபட உறுதி பூண்டு உதவி கோரி பிராத்திக்க வேண்டும். இதையும் ரமலானிலும் ரமலான் அல்லாத ஏனைய நாட்களிலும் தொடர்ந்து கடைப்பிடித்திடல் வேண்டும்.
ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதை நாம் பெற வேண்டும் எனும் ஆவலில் நாம் செயல்பட வேண்டும். அல்லாஹ் இதைப்பற்றி குர் ஆனில் கூறுவதையும் முறையாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவின் நன்மையைப்பற்றி குறிப்பிடும்போது, "அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது" என்று கூறுகின்றான். பார்க்க (97 :3)
அதாவது அந்த ஓர் இரவின் நன்மை ஆயிரம் மாதத்தின் நன்மைகளுக்குச் சமம் என்று குறிப்பிடுகின்றான். ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களும் நான்கு மாதங்களும் ஆகும். அதாவது ஒரு நாளின் நன்மை சராசரி மனித ஆயுளையும் விட அதிகமான ஆண்டுகளின் நன்மையை அளிக்க வல்லது என்பதைச் சிந்திக்க வேண்டும். நமது வாழ்க்கையில் ஒரு 10 லைலத்துல் கத்ரு இரவின் நன்மைகள் முழுமையாக நாம் பெற்றால் கூட அது 833 வருடங்களுக்கு நிகரான நன்மைகளை நமக்குப் பெற்றுத்தரும். 20 ஆண்டுகளின் லைலத்துல் கத்ரினை பெற்றால் 1666 வருடங்கள் என்று முந்தைய சமுதாயத்தினரின் ஆயுளின் அளவிற்கு நன்மைகளினைப் பெற்று தரவல்லது என்பதை நினைத்துப் பார்க்கும் போதே நமக்கு அல்லாஹ்வின் இந்த மகத்தான வெகுமதியினைத் தவற விடக்கூடாது எனும் எண்ணம் வரும்.
நமது வாழ்க்கையில் நாம் சந்தித்த கடந்த ரமலான்களில் லைலத்துல் கத்ரின் நன்மையை நாம் பெற்றுள்ளோமா என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். ஆயினும் அதைப் பெற நாம் நாடியுள்ளோமா? அதற்காக முறையாக நபி(ஸல்) வழியில் முயன்றுள்ளோமா? அதைப் பெறக்கூடிய பாக்கியம் வேண்டி அல்லாஹ்விடம் பிராத்தித்துள்ளோமா? என்பதை நாம் நம்மையே கேட்டு பதில் பெற வேண்டும். இதற்கு இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிராத்திப்பதுடன் அதை நபி(ஸல்) அவர்கள் வழியில் முயல வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் 'இஃதிகாப்' இருந்தார்கள் என்று நபி வழியில் காண முடிகிறது.
அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெறுவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி, அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று அறிவித்தார். உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)
ஆகையால் கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடிக் கொள்ளுமாறு கூறினார்கள், மேலும் அதன் இரவுகளை வணக்கங்கள் மூலம் சிறப்பிப்பார்கள்; தங்கள் குடும்பத்தினர்களையும் ஏவுவார்கள் என்றும் ஹதீஸ்கள் கூறுகின்றன.
நபி(ஸல்) அவர்கள் தாமும் தமது குடும்பத்தினரும் விழித்திருந்து லைலத்துல் கத்ரு இரவைப் பெற வணக்கங்களில் ஈடுபட்டதைப் போல், நாம் முயல வேண்டும். இயன்றால் அவர்கள் கடைசிப் பத்து நாட்கள் பள்ளியில் 'இஃதிகாப்' இருந்ததைப் போல் இஃதிகாப் இருக்க வேண்டும். நமது வாழ்நாளில் நேரம் கிடைக்கும் போது ரமலானில் குறைந்தது ஒரு முறையேனும் நபிவழியான (ஸுன்னத்தான) இந்த 'இஃதிகாப்' இருக்க வேண்டும் என்று உள்ளத்தினால் நாட்டம் கொள்ளவேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் துர்பாக்கியசாலிகளோ அவர்களைத் தவிர அனைவரும் லைலத்துல் கத்ரைப் பெற்றுக்கொள்வார்கள்.
நாம் அதைப் பெற்ற பாக்கியசாலிகளா துர்பாக்கியசாலிகளா என்பது நாமறியோம். அல்லாஹ்வே நன்கறிவான். ஆனால் பரவலாக இதை மறந்தவர்களாக முஸ்லிம்கள் பலர் வாழும் நிலையும் குறிப்பாகக் கடைசிப் பத்து நாட்களில் நமது பொன்னான நேரத்தை இவற்றைவிடவும் அதிகமாக இதர அலுவல்கள் பெருநாளின் தேவைகள் துணிமணிகள், காலணிகள், அணிகலன்கள், வாசனை திரவங்கள்,போன்ற இதர பொருட்களை வாங்கும் நிமித்தம் கடைவீதிகளில் கழிந்து விடுவதும் மாலையில் வெளியேறி இரவில் தாமதமாக அசதியுடன் வீடு திரும்பி இரவு தொழுகைகள் பஜ்ரு தொழுகை ஸஹ்ர் (உட்பட) லைலத்துல் கத்ர் எனும் மகத்தான இரவு போன்ற அனைத்தும் தவறிவிடும் நிலையையும் காண முடிகிறது. அவையெல்லாம் லைலத்துல் கத்ரு என்னும் இந்தப் பொன்னான வாய்ப்பை இழக்க வைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஷைத்தானின் முயற்சி என்றால் அது மிகையாகாது. இம்முயற்சியை முறியடிக்கும் விதமாக நமது தேவைகளை கடைசிப் பத்து நாட்களுக்கு முன்னரே அல்லது இரவுக்கு முன்பே தாமதமின்றி வாங்கி நேர விரயமின்றி, கடைசிப் பத்து இரவுகளில் அதிகமான வணக்கங்கள், நல்ல அமல்கள் புரிந்து கண்ணிய மிக்க இந்த லைலத்துல் கத்ரை பெற முயல வேண்டும்.
இதர எத்தனையோ விஷயங்களுக்கு கண் விழித்து இருக்கும் நாம் இந்த மகத்தான கடைசிப் பத்து இரவுகளிலும் நரகமீட்சி பெரும் விதத்தில் துவா செய்யவும் லைலத்துல் கத்ர் இரவினை முறையாகப் பெற்றிடவும் முனைந்திட வேண்டும். ஆனால் சிலர் இந்த லைலத்துல் கத்ர் எனும் கண்ணியமிகு இரவு ஒரே ஒரு இரவில் இருப்பதாக அதுவும் ரமலானின் 27ம் நாளில் இருப்பதாகத் தவறாக நம்பி, அந்த ஓரிரவை மட்டும் விசேஷமாக சிறப்பிக்கும் அமல்களில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.
நபி(ஸல்) அவர்கள் இப்படி ரமலான் 27 எனும் ஒரே இரவை சிறப்பிக்குமாறு கூறாததாலும் அவர்கள் வாழ்க்கையில் இது 21,23,25,27,29 போன்ற வெவ்வேறு ஒற்றைப்படை இரவுகளில் வந்துள்ளதாக அறிவித்துள்ளதாலும் 27ஆம் இரவை மட்டுமே சிறப்பிப்பது நபி வழிக்கு மாற்றமானது என்பதை நமது மறுமைக்காக கவனத்தில் கொள்ள வேண்டும். நமது அமல்களை நபிவழியில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம்காட்டாத அளவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்.
ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
லைலத்துல்கத்ரில் பிரார்த்தனை:
லைலத்துல் கத்ரில் அதிக அளவு பிரார்த்தனை புரிய நபி(ஸல்) அவர்கள் ஒரு துவாவை கற்று தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!)
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்.
இத்தகைய புனிதமிக்க ரமளானின் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதிக உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வல்ல இறைவனின் அருளை அடைவோமாக!
அல்லாஹ் நமக்குப் புனித ரமலானின் சிறப்புமிகு நாட்களின் அமல்களை முறையாக நிறைவேற்ற உதவிடவும் நமது பிராத்தனைகளை ஏற்று அருள் புரிந்திடவும் நமக்கு பாவமன்னிப்பளித்திடவும் நம் அனைவரையும் நரகில் இருந்து பாதுகாத்திடவும் புனித ரமலானின் அனைத்து நன்மைகளையும் முழுமையாக பெற்றிடும் விதத்தில் அல்லாஹ்வின் ஏற்பிற்குரியதாக நமது அமல்கள் அமைந்திடவும் அதன் மூலம் நமது இம்மை மறுமை வாழ்க்கை வெற்றி பெற்றிடவும் இந்த புனித ரமலான் முதல் என்றென்றும் பிராத்திப்போமாக.
நன்றி:சத்திய மார்க்கம்.
ரமலானிலும் அல்லாஹ்வுக்காக இணையதளத்தில் பாடுபடும் ஒவ்வொரு சகோதரருக்கும் அல்லாஹ்தஆலா ரஹ்மத்தையும், பரக்கத்தையும், ஜன்னத்தையும் அருள் புரிவானாக. ஆமீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக